Sunday, January 22, 2012

கொல்கத்தா பயண அனுபவங்கள்


விமானத்தை விட்டு வெளியே வந்த போது என்னை வரவேற்றது சிமெண்ட் குடோன் போன்ற கொல்கத்தா விமான நிலையமும் நான் பணம் கட்டி முன்பதிவு செய்திருந்த கார் கம்பெனி அனுப்பி வைத்த பழைய ஓட்டை அம்பஸெடர் கார் மற்றும் வயதான ஒரு பெங்காலி மட்டுமே தெரிந்த டிரைவர். அவரிடம் எப்படியோ சைகை மொழியில் புரிய வைத்து ஹோட்டல் சென்று அடைந்தேன் (பின்னர் அவர்களிடம் சண்டை போட்ட பிறகு ஹிந்தி தெரிந்த டிரைவரும், இண்டிகாவும் அனுப்பி வைத்தது வேறு கதை, கார் கம்பெனிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்).

ஒரு முறைக்கு மேல் கட்டிடம் மற்றும் கார் என எதற்கும் பெயிண்ட் அடிக்கும் பழக்கம் இந்த நகரில் இல்லை போலும், இதனால் மொத்த நகரமே பழையது போல் காட்சி அளிக்கிறது. இங்கு அம்பஸெடர் கார் எண்ணிக்கையில் மிக அதிகம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மிகவும் குறைவு, இதற்கு கட்டுபாடின்றி எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்ற காரோட்டிகளின் கொள்கையினால் ஏற்பட்ட உயிர் பயம் காரணமாக இருக்கலாம்.

என்றோ வழக்கொழிந்த சைக்கிள் ரிக்ஷா, கை ரிக்ஷா மற்றும் டிராம் புழக்கம் இந்த நகரை மேலும் பழமையாக காட்டுகிறது. இதற்கு மேல் ஒடுக்கு விழ முடியாத தகர டப்பா போன்ற பஸ், மஞ்சள் நிற அம்பஸெடர் டாக்ஸி, பஸ் நுழையாத இடங்களுக்கு ஷேர் ஆட்டோ இவை இந்த நகரத்தின் அடையாளம். (இங்கு டாக்ஸியில் கண்டிப்பாக மீட்டர் போடுவார்கள், இப்போதைய நிலவரப்படி மீட்டர் X 2 + 2 என்று கணக்கு போட்டு பணம் கொடுக்க வேண்டும். அதாவது மீட்டரில் பத்து ரூபாய் காட்டினால் 10 X 2 + 2 = 22 ரூபாய் கொடுக்க வேண்டும்) ஷேர் ஆட்டோ பக்கமே செல்ல வேண்டாம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் இறக்கி விடுவர். பஸ் மற்றும் ஆட்டோவில் செல்ல வழி கேட்க பெங்காலி தெரிந்திருப்பது அவசியம்.

இனி இங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி

VICTORIA MEMORIAL
ஆங்கிலேய ஆட்சியின் போது இராணியின் நினைவாக எழுப்பபட்ட பளிங்கு மண்டபம் இப்பொழுது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் பிரம்மாண்ட கூரை, சுவர் ஓவியங்கள், கட்டிட அமைப்பு ஆங்கிலேய கட்டிட வல்லமையைப் பறைசாற்றுகிறது. இதில் உள்ள ஓவியங்கள் மற்றும் புகைபடங்கள் மூலம் இந்த நகரத்தின் வரலாற்றை அறியலாம் (கொல்கத்தா ஒரு காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது என்பது பலருக்கு ஆச்சர்ய செய்தியாக இருக்கும்). இங்கு ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைந்து வெளியே வரும் அளவு மெல்லிய மஸ்லின் புடவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. போர்வாட்கள், உடைகள், பீரங்கி என பல அறிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல பொருட்கள் சரியான கவனிப்பு இன்றி துரு பிடிக்க துவங்கி உள்ளது வேதனையாக இருந்தது. இது கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம்.

BIRLA MANDIR
பிர்லா மந்திர்
 வெள்ளை பளிங்கு கொண்டு கட்டப்பட்ட கோயில், ஹைதராபாத்தில் உள்ள பிர்லா மந்திரின் அமைப்பில் உள்ளது. இரவு நேரத்தில் விளக்குகளுடன் ஜொலிக்கும் கோபுரம் மிக ரம்மியமான காட்சி. இங்கு சிலைகள் அனைத்தும் வெள்ளை பளிங்கினால் செய்யப்பட்டது. (கண்டிப்பாக கற்பூரம் ஏற்ற அனுமதி இல்லை). இங்கு திருமாளின் அனைத்து அவதாரங்களும் சிலை வடிவில் உள்ளது. கொல்கத்தாவில் சுற்றுசூளல் எவ்வளவு மாசுபட்டு உள்ளது என்பதற்கு இந்த கட்டிடத்தின் தற்போதைய நிறம் ஒரு உதாரணம்.

GREAT BANYAN TREE
இது INDIAN BOTANIC GARDEN என்ற மிக பறந்து விரிந்த தாவர பூங்காவின் மத்தியில் உள்ளது. இது 250 வருடங்களுக்கு முன்பு முளைத்தது, இன்று கின்னஸில் இடம் பெரும் அளவு 1.5 ஹெக்டேர் பரப்பிற்க்கு வளர்ந்துள்ளது, கீழே விழும் விழுதுகள் வேரூன்றி தொடர் மரமாக மாறிய அதிசயத்தை காணலாம். ( இங்கு பார்பதற்க்கு மரத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை நேரம் இல்லாவிடில் தவிர்க்கலாம்)

HOWRAH BRIDGE
பல சினிமாக்களில் பார்த்த ஹவுரா ப்ரிட்ஜ், இது ஒரு போல்ட் கூட உபயோகபடுத்தாமல் உருக்கி ஒன்று சேர்த்து கட்டப்பட்டது. இது சுற்றுலா தளம் இல்லை, பார்பதற்க்கு ஒன்றும் இல்லை, வேண்டுமானால் ஹவுரா ப்ரிட்ஜ் பார்த்தேன் என சொல்லி கொள்ளலாம்.

GARIA HATT
இது சாலை நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம். நடைபாதை கடைகள் தானே என எண்ண வேண்டாம் நல்ல தரமான பொருட்களும் கிடைக்கும் கொஞ்சம் பேரம் பேச வேண்டும் (பெங்காலி மொழியில் கிச்சு கொம் கரோ என்றால் கொஞ்சம் கம்மி செய்யுங்கள் என்று பொருள்). இங்கு நான் வாங்கிய பொருட்களின் மொத்த மதிப்பு 6500. கைவேலைபாடுகள் கொண்ட அழகான, தரமான நியாய விலைக்கு பெங்காளி புடவை வாங்க இங்கு உள்ள Traders Assembly Mega Shop (208/7, Rashbehari Avenue) கடைக்கு செல்லலாம் (ஆனால் இந்த கடையில் பேரம் பேசக்கூடாது).

DAKSHINAPAN SHOPPING COMPLEX
இது GARIA HATT இல் கலை பொருட்கள், நுண்ணிய வேலைப்பாடு அமைந்த சிலைகள் மற்றும் உடைகள் வாங்க சிறந்த இடம். இதன் சிறப்பு அம்சம் இங்கு உள்ளவை ஒவ்வொரு மாநில அரசு நடத்தும் கடைகள், இதில் அந்தந்த மாநிலத்தின் சிறந்த கலை பொருட்களை விற்கப்படுகின்றன ( தமிழக அரசு நடத்தும் மண் சிற்பங்கள் விற்கும் கடையும் உள்ளது ).

NEW MARKET
இது கிட்டதட்ட GARIA HATT போன்று நடைபாதை கடைகளுக்கு பிரசித்தி பெற்ற ஒரு இடம், ஆனால் இங்கு கடைக்காரர்கள் ஆங்கிலமும் பேசுவார்கள், இதற்க்கு மிக அருகில் உள்ள ஹிப்பி காலனி ஒரு முக்கிய காரணம்.

DAKINESHWAR KAALI TEMPLE & BELUR MATT
காளி கோயில்
கொல்கத்தா நகரின் மிகுந்த புகழ் வாய்ந்த காளி அம்மாவின் திருக்கோயில், இதன் அமைப்பு ஏறக்குறைய மற்ற வடஇந்திய கோயிலிகளை ஒத்திருக்கும். இங்கிருந்து ஆற்றை படகில் கடந்து சென்றால் (படகு சத்தம் ஆறு ரூபாய்) பேலூர் மடத்தை அடையலாம். இது இராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் அவர்களின் தலைமை மடம், இதன் சிறப்பு அம்சம் அமைதி தவளும் தியான மண்டபம். கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும் ஹூக்ளி ஆற்றில் படகில் மிதந்து கொண்டு பௌர்ணமி நிலவின் ஒளியில் காளி கோயில் படித்துறை மற்றும் அதன் பின்னனியில் ஜொலிக்கும் கோபுரமும் மனதில் ஒரு இனிய வருடல்.
படகு சவாரி
பேலூர் மடம்

நீங்கள் செல்லும் பொழுது கண்டிப்பாக சாப்பிட வேண்டியது எலிஷ் மீன், குலாப் ஜாமூன், மிஷ்டி தோஹி, சந்தேஸ்

2 comments:

  1. மூணு மாசமா ப்ளாக் பக்கம் வராம இருந்தில மொதள்ள அதுக்கு மொத பக்கதுல மன்னிப்பு கேளு ...


    போட்டோலாம் சூப்பர் ரா இருக்கு மச்சி ...

    நீங்கள் செல்லும் பொழுது கண்டிப்பாக சாப்பிட வேண்டியது எலிஷ் மீன், குலாப் ஜாமூன், மிஷ்டி தோஹி, சந்தேஸ்......இதுதான் மச்சி நம்ம மேட்டர்ரு


    அப்பறம் கொல்கத்தா பிகர்ஸ் பத்தி ஒண்ணுமே சொல்லையே பா

    ReplyDelete
  2. மன்னிச்சிக்கோ நண்பா வேலை கொஞ்சம் ஜாஸ்தி பிளாக் பக்கம் வரதுக்கே நேரம் இல்லை

    உன் கேள்விய பாத்து அதுக்கு பதில் போட இன்னும் மூணு மாசம் ஆயிடுச்சு அதுக்கு ஒரு வாட்டி மன்னிச்சுடு

    ReplyDelete